AFG vs BAN: வங்கதேசத்தை ஆப் செய்த ஆப்கன் - ஒரே டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2019, 11:27 AM IST
AFG vs BAN: வங்கதேசத்தை ஆப் செய்த ஆப்கன் - ஒரே டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை!! title=

பங்களாதேஷ் நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, அந்நாட்டுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டி கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி சாட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தனது முதல் இன்னிங்ஸில் ரஹ்மத் ஷா 102 (Rahmat Shah) மற்றும் அஸ்கர் ஆப்கான் 92 (Asghar Afghan) நிதானமான ஆட்டத்தால் 10 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் (Taijul Islam) நான்கு விக்கெட்டை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மோமினுல் ஹக் 52 (Mominul Haque)  மற்றும் மொசாடெக் ஹொசைன் 48 (Mosaddek Hossain) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் (Rashid Khan) 5 விக்கெட்டும், முகமது நபி (Mohammad Nabi) 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

137 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி, தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ரஷித் கானின் அபாரமான சுழல் பந்துவீச்சில் பங்களாதேஷ் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், 173 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார்.

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 11 விக்கெட்டை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

Trending News