டெல்லி: இந்தியா-சீனா இடையிலான பிரச்சனைகள் பற்றிய பேச்சுவார்த்தைக்காக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சீனா செல்கிறார்!
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே 73 நாட்களாக நீடித்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி இன்று மாலை சீனா செல்கிறார். அங்கு வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம், எல்லைப் பிரச்சினை, போன்றவற்றுக்கு சுமுகத்தீர்வு காணும் வகையில் இப்பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்றும் இரு தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா-சீனா இரு நாட்டுத் தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவது 30 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.