மழைக்காலத்தில் சிலிண்டர் கேஸ் உபயோகம் அதிகரிக்கும் நிலையில், அதனை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் உபயோகத்தை குறைக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால், எரிவாயு மிச்சமாகும்.
பொதுவாகவே சிலிண்டரில் இருந்து கேஸ் வீணாவதை தடுக்க, எரிவாயு கசிவு இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு கேஸ் பர்னரில் இருந்து ஏதேனும் லீக் இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.
சிலிண்டரில் இருக்கும் சீல் சரியாக இருக்கிறதா இல்லை அதில் இருக்கும் பின் (PIN) லூசாக இருந்தால் கூட கேஸ் லீக்காக வாய்ப்பு இருக்கிறது. அதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுதவிர மழைக்காலத்தில் எந்த உணவுப் பொருட்களை சமைத்தாலும் நன்கு ஊற வைத்து சமைக்க வேண்டும். ஏனென்றால் குளிர் காரணமாக பாத்திரங்கள் வெப்பமடைய கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அரிசி, பருப்பு என எல்லாவற்றையும் ஊற வைத்து சமைக்கவும்.
குளிர் சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த எந்த பொருளையும் உடனே சமைக்க வேண்டாம். இது அதிகப்படியான கேஸ் நுகர்வுக்கு வழிவகுக்கும். எந்த பொருளை பிரிட்ஜில் இருந்து எடுத்தாலும் சிறிது நேரம் வெளியே வைத்திருந்துவிட்டு சமைக்கவும்.
கேஸ் அடுப்பில் ஸ்லோவில் வைத்து எல்லாவற்றையும் சமைக்க முயற்சி செய்கிறார்கள். இப்படி மழைக்காலத்தில் சமைக்ககூடாது. ஏனென்றால் குறைந்த வெப்ப நிலை காரணமாக உணவுப் பொருட்களை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
அதேபோல் மழைக்காலத்தில் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஸ்விட்ச் பாக்ஸ் அருகே சிலிண்டர்களை வைக்கக்கூடாது.
உங்கள் கேஸ் சிலிண்டர் டியூப் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அவற்றை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
கேஸ் அடுப்பில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அவற்றை முழுமையாக சரி செய்துவிட்டு சமைக்கவும். இல்லையென்றால் அதனால் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. சிலிண்டர் எப்போது பயன்படுத்தும்போதும் இத்தகைய பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.