ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாக எடுக்க திட்டம்

Last Updated : Aug 11, 2016, 05:50 PM IST
ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாக எடுக்க திட்டம் title=

ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.

கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முன்னணி கதாநாயகன் ஆனார். தற்போது அவருக்கு 65 வயது ஆகிறது. இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியதோடும், சாதனையும் படைத்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை அவரது மகள் சவுந்தர்யா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சவுந்தர்யா கூறும்போது:-  எனது தந்தை கடின உழைப்பால் சினிமாவில் முன்னேறினார். அவரது வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அவரை பற்றி மற்றவர்களை விட, எங்களுக்கு நன்றாக தெரியும். எனது தந்தையை நான் மிகவும் நேசிக்கிறேன். அவரது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்றார்.

ரஜினிகாந்தின் வாழ்க்கையை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா புத்தகமாகவும் எழுதி வருகிறார். ரஜினிகாந்த் பற்றிய சினிமா படத்தில் அவரது இளமைப்பருவம், கண்டக்டர் பணி, சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடி பட்ட கஷ்டங்கள், அரசியல் தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இடம்பெற உள்ளது. இந்த படத்தில் நடிப்பது யார்? இயக்குவது யார் என்ற விவரங்களை சவுந்தர்யா வெளியிடவில்லை.

Trending News