லைகா நிறுவனம் தயாரிபில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “2.0” படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. இதற்கான விழா ஏப்., 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர் ரஜினி இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் இலங்கை பயணத்தை ரத்து செய்விட்டதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள செய்தி:-
என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு அன்பு வணக்கங்கள். லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் இலங்கையில் உள்ள வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளார். அவர் கட்டிய வீடுகள் ஏழைகளுக்கு வழங்குவதற்காக அந்த விழாவில் கலந்து கொள்ள என்னையும் அழைத்தார். ஏப்., 9ம் தேதி நடக்கும் அந்த விழாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். என்னுடன் இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல்வர் விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மறுநாள் ஏப்., 10ம் தேதி வவுனியா சென்று வீடுகளை பயணாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டமும், அதன்பிறகு முல்லைத்தீவு கிளிநொச்சி, புதுகுடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தருணத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று அன்புடன் கேட்டு கொண்டுள்ளார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதாக ஏற்று கொள்ளாவிட்டாலும் அவர்களின் வேண்டுகோளுக்காக நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.
அதேசமயம் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், திருமாவளன் சொன்னதை போன்று மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனி வரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த கூறியுள்ளார்.
Official statement from our Thalaivar @superstarrajini pic.twitter.com/LqIFvTHos0
— RIAZ K AHMED (@RIAZtheboss) March 25, 2017