Free Scooty Yojana 2025 | ஆதார் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும் என பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்களில் ஆதார் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் மத்திய அரசு இலவச ஸ்கூட்டி (Free Scooty) கொடுக்கிறது என பரவும் செய்திக்கு மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் அண்மைக்காலமாக ஒரு வாட்ஸ்அப் செய்தி வேகமாக பரவிக் கொண்டிருகிறது. அதில் ஆதார் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் மத்திய அரசு இலவசமாக ஸ்கூட்டி வழங்குகிறது என கூறப்படுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் சூப்பர் திட்டம் (Prime Minister Narendra Modi Free Scooty Yojana Scheme 2025), எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் 'இலவச ஸ்கூட்டி திட்டம் 2025' (Free Scooty Yojana) இன் கீழ் இலவச ஸ்கூட்டி கிடைக்கும் என்று பரப்பப்படுகிறது. யூடியூப்களில் நிறைய வீடியோக்கள் இதுகுறித்து போடப்பட்டுள்ளன.
ஆனால் அப்படி ஒரு திட்டமே மத்திய அரசிடம் இல்லை. மத்திய அரசு இலவச ஸ்கூட்டி வழங்குவதாக பொய்யான தகவலை பலர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் ஆதார் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் இலவச ஸ்கூட்டி என கதைவிட்டுள்ளனர்.
மத்திய அரசின் பத்திரி இந்திய அரசின் நோடல் நிறுவனமான பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB உண்மைச் சரிபார்ப்பு குழு, 'இலவச ஸ்கூட்டி திட்டம் 2025' இன் கீழ் அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இலவச ஸ்கூட்டி கிடைக்கும் என்று யூடியூபில் பரவி வரும் கூற்றை மறுத்துள்ளது.
இந்தக் கூற்று தவறானது என தெரிவித்துள்ளது. மத்திய அரசு அத்தகைய எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. யூடியூப் சேனலில் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு பதில் அளித்துள்ளது.
அந்த வீடியோவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் மத்திய அரசு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்கூட்டி வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் டேக் செய்து, இது ஒரு பொய்யான தகவல் என விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன் எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களிலும் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இந்த தகவலை பகிர்ந்திருக்கிறது. எனவே ஆதார் அட்டை வைத்திருகும் எல்லோருக்கும் ஸ்கூட்டி கிடைக்கும் என உங்கள் வாட்ஸ்அப்புக்கு ஏதேனும் மெசேஜ் வந்தால் அதனை புறம்தள்ளிவிடுங்கள். நம்ப வேண்டாம்.
மேலும், இப்படியான பொய் தகவலை பரப்புவர்கள் மீது மத்திய மாநில சைபர் கிரைமில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்து போலியாக யாரேனும் தகவல் பரப்பினால் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும்.