தேர்தல் நேரங்களில் விதிகளை மீறாமல் வரிசையில் நின்று வாக்களிப்பது, வரியவர்களுக்கு சத்தமின்றி உதவுவது என எதிலும் வித்தியாசமானவர் அஜித்!
அப்படித்தான், தன்னை தேடிவரும் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நாயகர்களுக்கு மத்தியில் ரசிகர்களை தானே தேடி சென்று போட்டோ எடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் அஜித்குமார்.
ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென ரசிகர் மன்றத்தினரை சந்திப்பார் அஜித். இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடக்கும். ஒவ்வொரு ரசிகரிடமும் ஜாலியாக பேசிவிட்டு பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
அடுத்த மாதம் வேறு பகுதியில் உள்ள ரசிகர் மன்றத்தினருடனான சந்திப்பு நடைபெறும். இதற்காக அவரிடம் ஒரு தனி ஸ்பெஷல் டீமே செயல்பட்டது. இப்படி ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டிருந்த அஜித்குமார் ஒரு நாள் திடீரென ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படுவதாக அறிவித்தார். அவருடைய நாற்பதாவது பிறந்த நாளுக்கு முன்! அதாவர்து 2011 ஏப்ரல் 29-ம் தேதி!
என்ன காரணம்?
ஒவ்வொரு ஆண்டும் அஜீத் பிறந்த நாளான மே 1-ம் தேதி அவர் வீட்டின் முன் ரசிகர்கள் கூடுவது வாடிக்கை. அப்போது ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்வார். அன்றைய தினம் 2 நாட்களுக்கு முன்பாகவே அஜித் வீட்டிற்கு முன் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். சிறிது சிறிதாக கூட்டம் பெருகினாலும் ரசிகர்களை சந்திக்க அஜித் வரவில்லை.
பிறகு தாமதமாக வந்தார். அப்போது ரசிகர்கள் கூச்சலிட்டனர். நீண்ட நேரமாக காத்திருந்ததாக கத்தினர். வெளியூரில் இருந்து வந்த ரசிகர்கள், தாங்கள் எவ்வளவும் சிரமப்பட்டு வந்தோம் என்பதை எடுத்துக்கூறினார்கள். இன்னும் பலரோ சாப்பிடாமல் கூட காத்துக்கிடப்பதாக தெரிவித்தனர். இவ்வாறாக ரசிகர்கள் சொல்ல சொல்ல அது அஜித்தின் மனதி ஏதோ செய்தது. தனக்காக ரசிகர்கள் இவ்வளவு கஷ்டப்படுவதை நினைத்து பார்த்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இதே கதை தொடர்ந்தது. பிறந்த நாளுக்கு முன்பாக வீட்டுக்கு வருவது மட்டும் அல்லாமல் சிலர் சொந்த விஷயங்களுக்காக ரசிகர் மன்றங்களை பயன்படுத்திக்கொண்டனர். ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர் மன்ற கொடியுடன் சிலர் அரசியல் கட்சி பிரச்சாரங்களில் பங்கேற்றதை நினைத்து வருந்தினார்.
இந்த சூழலில் தான் அன்று ரசிகர்களை சந்தித்துவிட்டு வீட்டுக்குள் சென்ற அஜித் யாரும் எதிர்பார்க்காத ஓர் முடிவை எடுத்தார். அது தான் மன்றங்களை கலைக்கும் முடிவு.
அன்றைய சூழலில் அஜித்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படிக்க | அஜித் அரசியலுக்கு வர தயாராகிறார் - ஜெயலலிதாவின் உதவியாளர்!
அன்று அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை இதுதான்!
தேதி - 29.04.2011
பிறந்த நாள் அறிக்கை அஜித்குமார்
வணக்கம் பல!
அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரை பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும்; இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்.
நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு அதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன்) என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தாங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலதிட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. வருகிற மே 1ஆம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்து எனது முடிவாக நை அறிவிக்கிறேன். இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.
மாறி வரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கௌரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும் எனது உண்மையான ரசிர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.
வாழு!
வாழ விடு 1
அஜித்குமார்
அன்றைய தினம் மன்றத்தை கலைத்தாலும், எதிர்காலத்தை மறந்து பொழுதுபோக்கை உயிர்மூச்சாக எண்ணி சுற்றித்திரிந்த ரசிகர்கள் இனியாவது திருந்தி குடும்பத்தை கவனிப்பார்கள் என அஜித் மனதளவில் மகிழ்ந்திருப்பார். அவரிடம் இருந்து வெளியான இந்த அதிரடி அறிக்கையால் அன்றைய தினத்தை அப்போது துக்க நாளாக அவரது ரசிகர்கள் கருதினாலும் ஒவ்வொரு ஆண்டும் அஜித்குமாரின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாகவே கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | #AK62 அப்டேட்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR