விவாகரத்து வழக்கு: நடிகை அமலாபால் கோர்ட்டில் ஆஜர்

Last Updated : Aug 6, 2016, 02:34 PM IST
விவாகரத்து வழக்கு: நடிகை அமலாபால் கோர்ட்டில் ஆஜர் title=

கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த நடிகை அமலாபால் நடித்த தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை பிரபல பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய் இயக்கினார். இந்த படங்களை இயக்கியபோது, அமலாப்பாலுக்கும், விஜய்க்கும் காதல் ஏற்பட்டது.
இருவீட்டாரின் சம்மதத்து டன் கடந்த 2014-ம் ஆண்டு கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் அதே ஆண்டு, ஜூன் 12-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னரும் அமலாபால் நடிப்பு தொழிலை கைவிடவில்லை. பசங்க 2, அம்மா கணக்கு ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் ‘வடசென்னை’ என்ற திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமாவில் தொடர்ந்து அமலாபால் நடிப்பது அவரது கணவர் விஜய்க்கு பிடிக்கவில்லை என்று முதலில் கூறப்பட்டது.

இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் ஆகியோர் இன்று காலை தனித்தனி காரில் வந்தனர். அவர்கள், சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி மரியா டில்டா முன் ஆஜரானார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் 10-ம் தேதி திருமணம் நடந்தது. ஓரு ஆண்டிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2015 மார்ச் 3-ம் தேதி முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்கிறோம்.எங்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. சேர்ந்து வாழ வழியில்லை. எனவே பரஸ்பரம் விவாகரத்து கேட்கிறோம். நாங்கள் ஜீவனாம்சமோ சொத்துக்களோ கேட்கவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு 6 மாதத்துக்கு தள்ளி வைத்தார். 

Trending News