ஒரு படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் தான் புரியும். 10 நிமிட காட்சிகளை மிஸ் செய்தால் கூட படம் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும். ஆனால் இவரது படங்களை கடைசி 10 நிமிடங்கள் பார்த்தால் கூட கதைக்குள் நம்மை இழுத்து சென்றுவிடுவார். ஆம், அது தான் இயக்குநர் ராஜமெளலியின் ஸ்பெஷல்.
ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் இயக்குநராக கால் பதித்த ராஜமெளலி தனது படைப்புகள் மூலம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில் RRR திரைப்படம் இன்று வெளியானது. உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர், ராஜமெளலி கதைகளில் நாயகன் குறித்து ஒரு பிளாஷ்பேக் எப்போதும் இடம்பெறும். அதுபோல இவருக்கும் ஒரு பிளேஷ்பேக் உண்டு.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கும் ஜூனியார் என்.டி.ஆரின் வெற்றி கணக்கை தொடங்கியதே ராஜமெளலி தான். அப்போதைய தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்த ராகவேந்திர ராவ் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தை இயக்க முடிவெடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பு ராஜமெளலிக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை தெலுங்கு சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பயன்படுத்திக் கொண்டார். 2001-ல் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி 10 கோடி ரூபாய் வசூல் ஆனது. ஆனால் இதில் சோகம் என்னவென்றால் ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் இயக்குநர் ராஜமெளலி என்பது பலருக்கும் தெரியவில்லை. அனைவரும் இந்த படத்துக்காக ராகவேந்திர ராவ்வையே புகழ்ந்து தள்ளினர்.இமாலய வெற்றியை கூட கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். உடைந்து அழுத ராஜமெளலியை தேற்றி நம்பிக்கை ஊட்டினார் அவரது சரிபாதி ஜீவா ரமா. ஆம் ராஜமெளலியின் மனைவி அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
மேலும் படிக்க | கே.ஜி.எஃப் 2 படத்தினால் பீஸ்ட் படத்திற்கு சிக்கல்!
ராஜமெளலிக்கு சிறு வயது முதலே புராண கதைகளின் மீது நாட்டம் அதிகம். அதற்காக ராஜா காலத்து கதைகளை ஒரு வரிவிடாமல் படித்து விடுவார். நமக்காக பாகுபலி படத்தை இயக்கி மகிழ வைக்க பள்ளி படிக்கும் போதே தன்னை தயார் படுத்திக்கொண்டார். இதற்கு நடுவே சில மோசமான விஷயங்கள் ராஜமெளலியை புரட்டிப்போட்டது. ஆனாலும் அசராமல் தனது நம்பர் 1 இயக்குநர் கனவை நோக்கி வேகமாக நகர்ந்தார். ஸ்டூடன் நம்பர் 1 படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்த அவரை மீண்டும் தன்னை இயக்க அழைத்தார் ஜூனியர் என்.டி.ஆர். அப்போது உருவானது தான் சிம்ஹாத்ரி. இந்த படம் 2003-ல் வெளியாகி 30 கோடி ரூபாய் வசூல் செய்தது. அந்த காலகட்டத்தில் இந்த வசூல் மிகப்பெரியது. அதன்பிறகு தான் படத்தின் இயக்குநர் பற்றி பலரும் தேடிப்பார்த்தார்கள்.
அடுத்தடுத்து சிம்ஹாத்ரி, சத்ரபதி, விக்ரமாகுடு, எமதொங்கா, மகதீரா,மரியாத ராமண்ணா, ஈ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். இதில் மகதீரா படம் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 150 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. முன் ஜென்ம கதையை கொண்டு உருவான இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி இருப்பார் ராஜமெளலி. அதன்பிறகு ஈ-யை நாயகனாக வைத்து அவர் இயக்கிய ஈ படத்தை ஆரம்பத்தில் அனைவரும் கேலி செய்தார்கள், யானை, சிங்கம் என்றால் கூட பரவாயில்லை ஈ எல்லாம் நாயகனா என்ற ஏலனப்பேச்சுக்களை காது கொடுத்து கேட்காமல் அசால்டாக தனது பாணியில் இயக்கினார். படம் வெளியானது ராஜமெளலி இந்திய அளவில் அறியப்பட்டார். வெறும் 26 கோடி ரூபாய்க்கு உருவான இந்த படம் 125 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை கேட்டு கொரிய சினிமா நிறுவனங்கள் இவரை அணுகியது.
மேலும் படிக்க | RRR Box office: 800 கோடி வசூல், பிளாக்பஸ்டர் சாதனை
அதன்பிறகு என்ன தனது நீண்ட நாள் கனவாக புராண கதையை கையில் எடுத்தார். இந்த படம் அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்தும் தன் மீதான நம்பிக்கையை மட்டும் நம்பி களமிறங்கினார். பாகுபலி உருவானது. உலக அரங்கில் இந்திய சினிமாவை கொண்டு சென்றது இந்த படம் என்றால் அது மிகையல்ல. 3 ஆண்டுகள் கடும் உழைப்பை ஒட்டு மொத்த பாகுபலி குழுவும் போட்டது. 4 மொழிகளில் வெளியான இந்த படம் 50 நாட்களில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஒரு படத்துக்கு நாயகனை விட இயக்குநரே பிரதானம் ஆனவர் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து உணர்த்தினார் ராஜமெளலி.
பாகுபலி 2 படம் எப்போது வெளியாகும் என உலகமே காத்திருந்தது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரிந்து கொள்ள அத்தனை ஆர்வம் மக்களுக்கு. இரண்டாம் பாகம் வெளியானது திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. அதன்பிறகு ராஜமெளலியின் படத்தை காண உலக அளவில் ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது அவர் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகியுள்ளது. வழக்கம் போல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆரம்ப கட்டத்தில் இவருக்கு ஒரு சீரியலின் ஒருசில எபிசோட்களை இயக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. ஆனால் எதற்கும் அசராமல் தனது நம்பர் 1 கனவை இன்று நினைவாக்கியுள்ளார். கிடைக்கும் வாய்ப்பை தனக்கான பாதையாக உருவாக்கி இன்று இமயம் தொட்டுள்ளார் ராஜமெளலி.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR