கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணை பிற்பித்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்தும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில், அதாவது தீர்ப்பு வழங்கி 4 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் 2 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. அதற்கு பதிலாக ஒரு திட்ட குழு அமைப்பு உருவாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அதிமுக எம்.பி-க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவில் எதுவும் இல்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
“பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்.” என்று மத்திய அரசை மிகவும் கடுமையாக தாக்கி விமர்சித்து உள்ளார்.
பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .
— Kamal Haasan (@ikamalhaasan) March 22, 2018