ஒடிசா புயல் பாதிப்புக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி வெள்ளிக்கிழமை காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. அதில், பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒருலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்ற உதவிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில், விமானம் , தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின்விநியோகம் போன்ற சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.