எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படும் டிக்டாக் செயலியால் பல இளைய தலைமுறையினர் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இந்த செயலி மூலம் தமிழக கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதில் வீடியோ மூலம் பல தவறான செயல்களும், மற்றவர்களை மிகவும் பாதிக்கும் வகையில் கிண்டல் செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கும் ஏற்ப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல குரல்கள் தமிழகத்தில் எழுப்பட்டது.
இந்த தடை சம்பவம், இன்று தமிழக சட்டபேரவையில் எதிரொலித்தது. தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி டிக்டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ப்ளூ வேல் விளையாட்டை எப்படி மத்திய அரசு மூலம் தடை செய்யப்பட்டதோ, அதேபோல டிக் டாக் செயலியும் தடை செய்யப்படும். அதற்காக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனக் கூறினார்.
இதன்மூலம் விரைவில் டிக் டாக் செயலிக்கு தடை வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.