கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடுக்க உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது..!
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே செல்போன்களின் மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்காக தமிழக அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இருபாலர் பயிலும் கல்லூரிகளில் மாணவர்கள் தங்களது செல் போன்களைப் பயன்படுத்தி மாணவிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன. அதேபோல், தேர்வு அறைகளிலும் செல்போன்கள் பயன்படுத்தி முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம், அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை, முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்ததும், பின்னர் மாணவர்களின் எதிர்ப்பால் தடை தளர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது...!