How To Handle Stubborn Kids : குழந்தைகள் தவறு செய்யும் நேரங்களில், நாம் “குழந்தைகள்தானே..” என்று விட்டு விடுவாேம். ஆனால், அவர்கள் முதல்முறை அப்படியொரு தவறினை செய்யும் போது, அப்போதே அதை அதட்டி, அது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகளுக்கு சிறுவயதில், எந்த வழியில் செல்கிறோம், இங்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. இதனால் குறிப்பிட்ட வயது வரை பெற்றோர், தங்கள் சொல்படி தங்களது குழந்தை நடக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால், அடம் பிடிக்கும் குழந்தைகள் சில அவ்வாறு நடந்து கொள்ளாது. அவர்களை சமாளிக்க சில ஈசியான டிப்ஸ், இதோ!
அமைதியாக இருங்கள்:
நாம் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதே போலதான் அவர்களும் நம்மிடம் நடந்து கொள்வர். பெரியவர்கள் எந்த வகையான உணர்ச்சிகளை காண்பிக்கின்றனரோ, அதையே அவர்களும் காண்பிப்பர். எனவே, நீங்கள் கோபமாக இருக்கும் போது கத்துவது அல்லது வன்முறைத்தனமான விஷயங்களில் ஈடுபடுவதனால் அவர்களும் அதையே பார்த்து வளர்வர். இதனால், சூழ்நிலை கையை மீறி போகலாம். எனவே, அவர்கள் உங்களிடம் முரண்டு பிடிக்கும் போது அதை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாளலாம்.
எல்லைகள்:
குழந்தைகள், மிகவும் முரண்டு பிடித்தால், ஏதாவது பொருள் கேட்டு அழுதால் அதன் பின்விளைவுகள் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு கூற வேண்டும். அனைத்திற்கும் ஒரு எல்லைக்கோடு நிர்ணயித்து அவர்களை அதிலேயே இருக்க செய்ய வேண்டும். ஒரு முறை மட்டுமல்ல, அவர்கள் எப்போதெல்லாம் இப்படி செய்கின்றனரோ, அப்போதெல்லாம் அவர்களிடம் இந்த எல்லைகள் குறித்து அறிவுறுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
பாசிடிவான தூண்டுதல்:
பெரும்பாலான குழந்தைகள், பெற்றோர் ஒரு விஷயத்தை பலமுறை கூறினால் கேட்டுக்கொள்வர். அதன் பிறகு அவர்கள் நடந்து கொள்ளும் முறைகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அப்படி நீங்கள் அந்த முன்னேற்றங்களை பார்க்கும் போது அவர்களிடம் பாசிடிவாக பேசலாம். இது, அவர்களுக்கு தொடர்ந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை தரும். இத்துடன் சேர்த்து, குட்டி குட்டி பரிசுகளை கொடுப்பதும் அவர்களை இன்னும் நல்ல மனிதராக மாற்றிவிடும்.
தேர்வுகள்:
அடம்பிடிக்கும் பிள்ளைகள், நாம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்வார்கள். ஒரு சூழல் அவர்கள் கைகளில் இல்லை எனும் போதுதான் இது போன்று அவர்கள் அதிகமாக கோபப்படும் சம்பவங்கள் நடைபெறும். எனவே, அவர்களிடம் அவர்களுக்கான விஷயங்களை தேர்வு செய்ய விட்டுவிட வேண்டும். இதனால் அவர்கள் தங்களை கட்டுப்படுத்தும் சக்தி தங்கள் கைகளில் இருப்பதாக நினைத்துக்கொள்வர்.
காரணத்தை புரிந்து கொள்ளுதல்:
குழந்தைகள் அடம் பிடிப்பதற்கான அடிப்படை காரணத்தை தெரிந்து கொண்டால் நீங்கள் சூப்பர் பெற்றோராக மாறி விடலாம். ஒரு சில நேரங்களில் அடம்பிடித்தல், அந்த குழந்தைகளின் மனதில் இருக்கும் பயம், எரிச்சல் அல்லது குழப்பத்தை தெரியப்படுத்தும் விஷயமாகவும் இருக்கலாம். எனவே, உங்கள் குழந்தை தனக்கு என்ன தேவை என்று சொல்கிறது என்பதையும் காதுக்கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் தனக்கான தேவையை தெரிந்துதான் கேட்கின்றனரா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்போது உங்களால் அவர்களை இன்னும் எளிதாக கையாள முடியும்.