கொரோனா வைரஸின் பயம் உலகெங்கிலும் உள்ள மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கிலும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்கொல்லி நோயாக பாவிக்கப்படும் இந்த வைரஸில் இருந்து தப்பிப்பது அறியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், சீனாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ரூபாய் நோட்டுகளிலும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தை தற்போது தூண்டியுள்ளது. இதன் காரணமாக பல கோடி மக்கள் தற்போது செவ்வதறியாது தவித்து வருகின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் நாம் பெரிதும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது பண நோட்டுகள். தொற்றால் கொரானா வைரஸ் பரவலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், தினம் தினம் நம் கையில் இருந்து மாறும் பண நோட்டுகள் மூலம் கிருமி பரவாதா என்ற கேள்வி எழுகிறது. இதே கேள்வி தான் சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் தோன்றியுள்ளது.
இதன் காரணமாக அவர் செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தனது கையிருப்பு முழுவதையும் பறிகொடுத்துள்ளார். பண நோட்டுகளில் கொரோனா கிரிமி இருக்கலாம் என நினைத்த சீன பெண், தனது கையிருப்பு பணங்களில் உள்ள கிரிமிகளை அகற்றும் முயற்சியாக சுமார் 3000 யென் (இந்திய மதிப்பில் 31000 ரூபாய்) பண நோட்டுகளை மைக்ரோவேவில் வைத்து சூடு செய்துள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் தனது கையிருப்பு அனைத்தையும் இந்த நிகழ்வின் போது இழந்துள்ளார். ஆம், அதிக சூட்டில் பண நோட்டுகள் அணைத்தும் சாம்பலாய் போனது.
ரூபாய் நோட்டுகள் மட்டும் அல்ல, கழிவறை காகிதங்கள், முகமூடிகள் மற்றும் கை துப்புரவுப் பொருட்கள் போன்றவற்றையும் தற்போது மக்கள் பீதியுடன் வாங்கத் துவங்கியுள்ளனர். அலுவலகம், பள்ளி போன்று இடங்களிலும் தொற்று ஏற்படாமல் தவிர்க்க கை துப்புரவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சீனாவின் வுக்ஸி மாகாணத்தின் ஜியாங்கின் நகரத்தைச் சேர்ந்த ஆன்ட் லி, தற்போது தொற்று பயத்தால் தனது சேமிப்பு பணங்களை இழந்துள்ளார். உள்ளூர் ஊடக தகவல்கள் படி ஆன்ட் லி, தனது வங்கியில் இருந்து கிடைத்த பண நோட்டுகளில் உள்ள வைரஸ் கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அவரது நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருந்தாலும், அவருடைய அச்சத்தில் நியாயம் உள்ளது. தொட்டால் நோய் பரவும் எனும் பட்சத்தில் பிறர் கையில் இருந்து பெறப்படும் ரூபாய் நோட்டுகளில் வைரஸ் தொற்று பரவாதா?... அவ்வாறெனில் அந்த தொற்றில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?... இத்தகைய சூழலில் முழுமையாக இல்லாவிட்டாலும் முடிந்தளவு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துதல் நல்லது எனவே தோன்றுகிறது.