தமிழக மக்களுக்கு 2004 டிசம்பர் 26 ஆம் தேதி கருப்பு தினம் என்பதை சொன்னது இயற்கை....
உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவின் சுவடுகள் 14 ஆண்டுகள் ஆன பின்பும் மறையவில்லை. தமிழக மக்களுக்கு 2004 டிசம்பர் 26 கருப்பு தினம் என்பதை சொன்னது இயற்கை.
14 ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் உருவான நில நடுக்கம் ஆழி பேரலையாய் உருவெடுத்து ஊருக்குள் புகுந்து மக்களை மொத்தமாக கொன்று குவித்தது. கண்ட இடமெல்லாம் மரணம். வயதானவரும் சரி பிறந்த குழந்தையும் சரி என்று பாராமல் உயிரை கொண்டு சென்ற கொடூரம்.
இதையடுத்து தான் தமிழக மக்களுக்கு சுனாமி என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டனர். இது போன்ற ஒரு கொடூரமான சம்பவம் உலகில் எங்குமே வரக்கூடாது என மக்கள் நினைக்கும் நிலை ஏற்பட்டது.
இச்சுனாமியால் தமிழகத்தின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட நகரங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் அரசு அறிவித்த கணக்குப்படி இறந்தவர் எண்ணிக்கை 1,017 பேர்.
இந்த கோர தாண்டவம் நடந்து இன்றோடு 14 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் சுனாமி ஏற்படுத்திய மறக்க முடியாத சுவடுகள் அனைவரின் மனதிலும் மறையாமல் இருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு உறவுகளை பறி கொடுத்தவர்கள் கலங்கி நிற்பதும், இனியும் இது போன்ற சோகம் நிகழுமா? என்று பதறுவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு சுனாமி ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் அடிக்கடி தகவல்கள் பரவி கடலோர மக்களை பீதியில் ஆழ்த்தி வந்தது. அது உண்மையாக இருக்கக்கூடாது என்றே அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இயற்கை மறுபடியும் மக்களை அட்சுருத்திக் கொண்டேதான் இருந்தது புயல் என்ற ரூபத்தில். இந்த புயல் குமரி மாவட்டத்தை மட்டுமே மையம் கொண்டு தாக்கியது. இந்த புயலுக்கு விஞ்ஞானிகள் ஓகி என்று பெயரிட்டனர். ஓகி புயல் கரையில் மட்டுமல்ல, கடலிலும் தனது கொடூரத்தை காட்டியது.
கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலையில்தான் இச்சோகம் நிகழ்ந்தது. இதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் கதி என்ன? என்பதே இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது.
டிசம்பர் மாதம் குமரி மாவட்ட கடலோர மக்களுக்கு சோக மாதமாக மாறிப்போனது. வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் அவர்கள் இந்த ஆண்டு எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிரார்த்தனையின்போது அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒக்கி புயலில் உயிரிழந்தவர்களுக்கும், மாயமானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர். நேற்று, நடந்த இந்த நினைவு பிரார்த்தனைகள் இன்று சுனாமி நினைவிடங்களில் தொடர்ந்தது.
இப்பிராத்தனை, குளச்சலில் 414 பேர் புதைக்கப்பட்ட கல்லறை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர். கொட்டில்பாட்டில் 199 பேர் இறந்த இடத்திலும், மணக்குடியில் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திலும் இந்த வழிபாடுகள் நடந்தன.
கடலையும், அதில் எழும் பேரலையையும் கண்டு பயப்படாமல் கடல் மேல் பயணம் செய்யும் மீனவர்கள் சுனாமி, ஓகி புயலுக்கு பின்னர் தொழிலுக்கு செல்லவே அஞ்சும் நிலையில் உள்ளனர். இது பற்றி குமரி கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறும்போது, சுனாமிக்கு பிறகு மீனவ கிராமங்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்தன.
ஆனால், இந்த ஆண்டு ஓகி புயல் எங்களை மீண்டும் புதைக்குழிக்குள் தள்ளி விட்டது. இதில், எங்கள் உறவுகளை இழந்து விட்டோம். இன்னும் பலர் என்ன ஆனார்கள்? என்பதே தெரியாமல் தவிக்கிறோம். தேடுதல் வேட்டை நடப்பதாக அரசு கூறுகிறது. காணாமல் போனவர்களை உயிரோடு கண்டுபிடித்து தராவிட்டாலும், அவர்களின் உடல்களையாவது மீட்டுத் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
14 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி எங்களை சூறையாடியது. இன்று ஒக்கி புயல் வேதனையை தந்துள்ளது. எங்களுக்கு விடிவு காலம் எப்போது? என்பதை இறைவன் தான் கூற வேண்டும் என்றனர். மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். நாமும் இவர்களுக்காக பிராத்தனை செய்வோம்.