நீதித்துறை VS மத்திய அரசு மோதல் முடிவுக்கு வருமா?

மத்திய அரசுக்கும், கொலிஜியம் அமைப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும், கொலிஜிய நடைமுறையைப் பின்பற்றியே தீர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறித்தும் செய்திகளில் கண்டிருப்போம். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, குடியரசு துணைத்தலைவர் உட்பட பலர் இவ்விவகாரம் குறித்துப் பேசி வருகின்றனர்.

Written by - Chithira Rekha | Last Updated : Dec 15, 2022, 06:42 PM IST
  • கொலீஜியம் முறைக்கு முடிவு கட்டத் துடிக்கும் மத்திய அரசு
  • நீதிபதிகள் நியமனத்தை விட்டுக் கொடுக்காத நீதித்துறை
  • நீதித்துறை VS மத்திய அரசு மோதல் முடிவுக்கு வருமா?
நீதித்துறை VS மத்திய அரசு மோதல் முடிவுக்கு வருமா? title=

பொதுவாக உச்ச நீதிமன்றத்திற்கோ, உயர் நீதிமன்றங்களுக்கோ புதிய நீதிபதிகள் நியமிக்கப்படும்போது, கொலிஜியம் பரிந்துரை செய்தது என்ற வார்த்தையை நாம் கேட்டிருப்போம். சரி...கொலிஜியம் என்றால் என்ன?. 

கொலிஜியம் என்பது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமைப்பு ஆகும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோடு, 4 மூத்த நீதிபதிகள் இந்த அமைப்பில் இருப்பார்கள். தலைமை நீதிபதியே இந்த அமைப்பிற்குத் தலைமை வகிப்பார். கொலிஜியம் அமைப்பே உச்ச நீதிமன்றத்திற்கும், அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

பொதுவாக, பதவி ஓய்வு பெறும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரை செய்வார். 1970-களுக்குப் பிறகு இந்தப் பரிந்துரைப் பதவி மூப்பு அடிப்படையிலேயே இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு, தலைமை நீதிபதி கொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசிப்பார். பிற உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஆலோசிக்கும் பட்சத்தில், அந்த உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளோடும் ஆலோசனை நடத்தப்படும்.

சில சமயங்களில் மூத்த வழக்கறிஞர்கள் நேரடியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்படலாம். கொலிஜியம் தனது பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்ப, அவர் பிரதமருக்கு அனுப்பி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பச் செய்வார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அந்தந்த உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். 

கொலிஜியம் அமைப்பு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 1981, 1993, 1998 ஆகிய ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் கொலிஜியம் அமைப்பு உருவானது. அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறையே பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமித்து வருகிறது.

அதே நேரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. ஒருவேளை மத்திய அரசு நிராகரிக்கும் பெயர்களை கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்தால் மத்திய அரசு அதனை நிறைவேற்றியே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. நீதிபதிகளே சக நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில் கூறியது இந்த மோதலை அதிகப்படுத்தியது. 

மேலும் படிக்க | நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது: உச்சநீதிமன்றம்

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு 10 பேர் அடங்கிய பட்டியலை கொலிஜியம் அண்மையில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியது. இதில் 2 பேருக்கு மட்டும் ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, மற்ற 8 பேரையும் நிராகரித்தது. இதேபோல, கடந்த ஆண்டு 11 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் வழங்கிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனை எதிர்த்து பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்போதுதான் காட்டமாகப் பல கருத்துகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 

கொலிஜியம் நடைமுறை குறித்து சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், அது இந்த மண்ணின் சட்டம் - அதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் - இந்தத் தகவலை மத்திய அரசிடம் எடுத்துக் கூறுங்கள். கொலிஜியம் பரிந்துரையை நீண்ட காலம் கிடப்பில் வைத்திருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார்.

அத்தோடு, மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா நீண்ட காலமாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, அதனால் தான் கொலிஜியம் பரிந்துரையைக் கிடப்பில் வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறதெனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனைக் கேட்கும்போது தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா என்றால் என்ன என்ற கேள்வி நம்முள் எழும்.          

 

கொலிஜியம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் உள்ள கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சியாக மத்திய அரசு அதற்காக மேற்கொண்ட நடவடிக்கையின் வெளிப்பாடுதான் தேசிய நீதித்துறை ஆணைய மசோதா. இந்த மசோதா கொலிஜியத்திற்கு பதிலாக, நீதிபதிகளை நியமனம் செய்வதற்காகக 2014-ம் ஆண்டு  கொண்டுவரப்பட்டது.  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையின் கீழ் செயல்படும் இந்த ஆணையத்தில் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 2 நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் 2 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

தலைமை நீதிபதியும், பிரதமரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இந்த இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, மக்களவையில் ஒரு மனதாகவும், மாநிலங்களவையில் ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்த நிலையிலும் நிறைவேறியது. இதிலிருந்தே, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நீதிபதிகள் நியமனத்தின் மீதுள்ள அதிருப்தியை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.  பின்னர் இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றமே ரத்து செய்தது.

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு கொலிஜியம் அமைப்பைக் குறிவைப்பதை எளிதில் கடந்துவிட இயலாது. ஏற்கெனவே மத்திய புலனாய்வு அமைப்புகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது எந்த அளவுக்குத் தேவையோ அதே அளவிற்கு நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியதும் அவசியம். நம்மைப் போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டியது அவசியமாகியுள்ள நிலையில் அரசியலமைப்பை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையும், அரசும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால், பாதிக்கப்படப்போவதென்பதோ மக்கள்தான்.   

மேலும் படிக்க | Bilkis Bano: பில்கிஸ் பானோ மனு விசாரணையில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News