புது டெல்லி: ஆறாவது நாட்களாக மருத்துவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருவதால், அதுகுறித்து பேசிய மம்தா "என்னை யாரும் தடுக்கு முடியாது. நான் மரணத்தை கண்டு பயப்பட மாட்டேன். மரணம் தான் என்னை பார்த்து பயப்படும் எனக் கூறியுள்ளார்.
இன்று வடக்கு 24 பர்கானாஸ் (North 24 Parganas) மாவட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் பீகார், உ.பி., பஞ்சாபிற்குச் சென்றால், இந்தி மொழியில் பேசுகிறேன். ஏனென்றால் இந்தி தேசிய மொழி. ஆனால் நீங்கள் மேற்கு வங்காளத்திற்கு வந்தால், பெங்காலி தான் பேச வேண்டும்.
தேர்தலுக்குப் பிறகுதான் மாநிலத்தில் வன்முறை அதிகமாக நிகழ்கிறது. மேற்கு வங்க மாநிலத்தை குஜராத் போல ஆக்க அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்காளத்தில் வன்முறையை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் வங்கதேசத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்று அவர் கூறினார்.
தற்போது சில தீய சக்திககளின் கண்கள் வங்காளத்தின் மீது இருப்பதாக கூறினார். ஏன் சாதாரண மனிதன் கூட தாக்குகிறான்? வங்கால் மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். நமக்கு வாக்கு இயந்திரம் (EVM ) தேவை இல்லை. வாக்குச் சீட்டு முறை தேவை. இதை வலியுறுத்தி ஜூலை 21 ஆம் தேதி போராட்டம் நடக்கும்.
வங்காள மாநிலத்தில் இருந்துக்கொண்டு வங்காளர்களை பயமுறுத்துவதா? இதை நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன். என்னை ஏன் பயமுறுத்த நினைக்கிறீர்கள்? எங்கள் போராட்டம் ஜனநாயக போராட்டம் ஆகும். காவல்துறையை பணிகள் செய்யாவிடாமல் தடுத்தால் பொதுமக்களின் நிலை என்னவாகும்? சில கட்சிகள் தங்கள் நிலையை மாற்றி வருகின்றன. சிபிஐ(எம்) வாக்குகள் பாஜகவுக்கு எவ்வாறு கிடைத்தது? போன்ற கேள்விகளையும் எழுப்பினார்.
மேலும் என்னை திட்டுவதினாலோ, குறை கூருவதினாலோ எந்த பயனும் கிடைக்காது. என்னைக் குறித்து எவ்வளவு அதிகமாக குறை கூறுகிறீர்களோ, அவ்வளவு அதிகமான இடங்களை வெல்வோம். மம்தா பானர்ஜி கோடிஸ்வரியின் மகள் அல்ல. அதனால் தான் என்னை பற்றி தவறாக கூறுகிறார்கள். நான் ஏழு நாட்கள் தருகிறேன். யாருக்கு எங்கு செல்ல வேண்டுமோ, எந்த கட்சியில் இணைய வேண்டுமோ இணைந்துக்கொள்ளலாம். நமது கட்சி புனிதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், கடந்த 10 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் முறையாக கண்காணிக்காததுதான் காரணம் எனக்கூறிய இறந்த நோயாளியின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதனையடுத்து மருத்துவர்களுக்கு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஆறாவது நாட்களாக இன்றும் தொடரும் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.