லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த 11-ம் தேதி முதற்கட்டமாக 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 67 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
இங்கு பா.ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 721 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது. பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதை காண முடிந்தது.
இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றபோது மொத்தம் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.