அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவிப்பு!!
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில், கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஆயிரம் ரூபாய் தவிர, பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லமும் வழங்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கடந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன், ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட எல்லையில் அமையவுள்ளதாகவும், விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்திற்கு, இது மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கள்ளக்குறிச்சி பகுதிக்கு 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு, சுற்று வட்டச் சாலை அமைக்கப்படும் என்றும், ரிஷிவந்தியம் பகுதியில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்படும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆறுகளின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டித் தரப்படும் என்றும், அவர் அறிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியுடன் இன்று புதிய மாவட்டமாக உதயமாகியது.