பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க டெல்லியில் Pariksha Pe Charcha என்ற தலைப்பில் நாளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 50 மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பிரதமரின் உரையைப் பார்க்கவும், பிற மாணவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் மாணவர்களின் கருத்துகளைப் பெற்று அதை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், ''தேர்வுக்கு பயம் ஏன்?'' என்ற நிகழ்ச்சி டெல்லி தல்கோத்தரா உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் ஆயிரத்து 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் உரை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பார்க்கும் விதமாக ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.... இளைஞர்களின் கற்பனையால் நாடு வளம் ஆக வேண்டும் என்றும், நமது கற்பனையில் மாற்றம் உருவாக வேண்டும் எனவும் கூறினார். வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை வருவது சகஜம்தான் என குறிப்பிட்ட மோடி, எல்லோரும் அந்த சூழலை சந்தித்திருப்போம் எனவும் தெரிவித்தார். சந்திரயான் -2 விண்கலத்தை சுட்டிக்காட்டி பேசிய மோடி, சந்திரயான் -2 தோல்வி அடைந்த போது நாடே சோகத்தில் இருந்தது என்றும், ஏவுகணை விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என சிலர் தம்மிடம் கூறியதாக தெரிவித்தார். எனினும் தாம் அங்கு சென்றதாகவும், சந்திரயான் முழு வெற்றி அடையாவிட்டாலும் விஞ்ஞானிகளின் முயற்சியை தாம் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் குழந்தைகளுக்கு பெற்றோர் அழுத்தம் தரக் கூடாது என வலியுறுத்திய அவர், வெற்றியை மதிப்பெண்கள் தீர்மானிக்காது எனவும் கூறினார். உலகம் முழுவதும் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் மோடி தெரிவித்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ராகுல் ட்ராவிட்டும், விவிஎஸ் லட்சுமணனும் அணியை சரிவில் இருந்து மீட்டதை நினைவு கூர்ந்தார். அதுவே நேர்மறை எண்ணங்களின் சக்தி எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றும், தொழில்நுட்பங்கள் நம்மை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.
தேர்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். பொதுத் தேர்வு என்பது ஒருவரின் கல்வி பயணத்தில் ஒரு மைல்கல். ஆனால் நல்ல மதிப்பெண்களை பெறுவதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பொதுத் தேர்வுகள் முக்கியமானதாக கருதப்பட வேண்டும், ஆனால் பரீட்சை மட்டுமே வாழ்க்கை கிடையாது. நமது முழு கல்வியும் எதையாவது கற்றுக்கொள்ள அல்லது செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. படிப்பை தாண்டி, எந்த ஒரு கூடுதல் செயலையும் செய்யாவிட்டால், நீங்கள் ஒரு ரோபோவைப் போல ஆகிவிடுவீர்கள். நாம் நமது நேரத்தை நிர்வகிக்க வேண்டும், கல்வியை தாண்டிய ஆர்வங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தக்கூடாது. எங்கள் குழந்தைகள், Extra- curricular activities நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லிக்கொள்ள பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
நமது வாழ்க்கை முறைகள், தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. நமது வேலையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பத்தால் நம் நேரத்தை திருட முடியாது, மாறாக தொழில்நுட்பத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்" என மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.