புது டெல்லி: இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் பாய்ந்தது. இது 48 நாட்களில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலாவில் இறங்கி ஆய்வு நடத்தும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான முதல் முயற்சி கடந்த 15 ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ராக்கெட்டில் கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம் வாயு குழாயின் வால்வில், மீக்குளிர் நிலையால் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது. ராக்கெட்டை பிரிக்காமல் அதில் கசிவு ஏற்பட்ட இடத்தை கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதனை அடைக்கும் பணிகள் மூன்று நாட்களாக நடைபெற்றன.
இதன்பின்னர் இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்க்கான கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
இந்தநிலையில், இன்று இந்தியாவின் மற்றொரு சாதனையான சந்திராயன்-2 விண்கலம் மேகங்களை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது விண்ணில். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.
இதனையடுத்து, இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
இது நம்முடைய வரலாற்றில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற சிறப்பு தருணங்கள்!
#சந்திரயான் 2 நமது விஞ்ஞானிகளின் வலிமையையும், விஞ்ஞானத்தின் புதிய எல்லைகளை அளவிட 130 கோடி இந்தியர்களின் உறுதியையும் விளக்குகிறது. ஒவ்வொரு இந்தியனும் இன்று மிகுந்த பெருமைப்படுகிறான்!
#சந்திரயான் 2 முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.
#சந்திரயான் 2 தனித்துவமானது, ஏனெனில் இது சந்திர நிலப்பரப்பின் தென் துருவப் பகுதியை ஆராய்ந்து ஆய்வுகள் செய்யும். ஏனென்றால் கடந்த காலத்தில் எந்தவொரு நாடும் நிலவின் தென் துருவப் பகுதியை ஆராயவில்லை. நாம் தான் ஆராய உள்ளோம். இதன்மூலம் சந்திரனைப் பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கும்.
#சந்திரயான் 2 போன்ற வெற்றிக்கரமான முயற்சிகள் மூலம் நமது இளைஞர்களை அறிவியல், உயர்தர ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை நோக்கி மேலும் ஊக்குவிக்கும்.
சந்திராயனுக்கு நன்றி..!!
இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.