புதுடெல்லி: இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.
இந்த குழுவானது ஆண்டு தோறும் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை சவுதி அரேபிய அரசுடன் கலந்து ஆலோசித்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல இந்த ஆண்டு 1.70 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்க ஹஜ் கமிட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1.36 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அந்நாட்டு மந்திரி முகமது சலேஹ் பின் தஹெர் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜனவரி 2-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 24-ம் தேதி ஆகும்.