வீரர்களின் தியாகத்தை சுயநலத்துக்காக மோடி பயன்படுத்துகிறார் - ராகுல் தாக்கு

Last Updated : Oct 7, 2016, 11:05 AM IST
வீரர்களின் தியாகத்தை சுயநலத்துக்காக மோடி பயன்படுத்துகிறார் - ராகுல் தாக்கு title=

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களின் தியாகத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, " கிசான் யாத்திரை' என்ற பெயரில் அந்த மாநிலத்தில் தொடங்கிய ஒரு மாத கால சுற்றுப் பயணத்தை தில்லியில் நேற்று வியாழக்கிழமை முடித்தார் 

பிறகு ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்தியாவுக்காக, ஜம்மு-காஷ்மீரில் அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்துக்குப் பின்னால் பிரதமர் மோடி தங்களை மறைந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் தியாகத்தை உங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். இது தவறானது. நாட்டைப் பாதுகாப்பதற்காக, இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால், நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களைப் பாதுகாக்கிறீர்கள் என்றார் அவர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரின் அதிரடி தாக்குதலுக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் போல செயல்பட்டுள்ளார் மோடி என்று ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் புகழாரம் சூட்டிய நிலையில், தற்போது கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பாஜக கட்சியின் தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:- பாகிஸ்தான் ஆக்கிரமிரப்பு காஷ்மீரில் அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தையும், தாக்குதல் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி, விரக்தியில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் கடன்:

கிசான் யாத்திரையை நிறைவு செய்வதற்கு முன் மீரட் நகரில் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- பெருநிறுவனங்களின் கடன்களை ரத்து செய்த மோடி அரசால் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாதா?'' என்று கேள்வி எழுப்பினார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெருநிறுவனங்கள் வாங்கிய 1 லட்சம் கோடி மதிப்பிலான கடன்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அப்படியெனில் விவசாயிகளின் கடனை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியாது?. விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலன்காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

 

 

Trending News