தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை கண்டு கட்சி தொண்டர்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 19-ஆம் நாள் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகி வருகின்றன. இக்கருத்து கணிப்புகள் மீண்டு பாஜக ஆட்சி அமையும், நடந்து முடிந்த தேர்தலில் 300 இடங்கள் வரை பாஜக பெறும் என தெரிவிக்கின்றன. எனினும் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் வரை இவ்வாறான போலி கருத்துகணிப்புகளை நம்ப வேண்டாம் என எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது உத்திர பிரதேச மாநில(கிழக்கு) காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, கருத்துகணிப்புகளை கண்டு கட்சி தொண்டர்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தமது கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை தம் கட்சி முகவர்கள் கண்கானித்து நியாமான தேர்தல் முடிவு வெளியாகிட உதவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. வெளியான கருத்துகணிப்புகளின் படி மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது. தேர்தல் நடந்து முடிந்த 38 தொகுதிகளில் பாஜக-ஆதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருந்தாலும் தமிழகத்தில் பாஜக-வின் கை இன்னும் ஓங்கவில்லை என்பதை இந்த தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேப்போல் கேரளாவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக 1 இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 16 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி-க்கு 4 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றது.
எனினும் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களை பெறும் எனவும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மாநில கட்சிகளான TDP மற்றும் TRS கட்சிகள் பெரும்பான்மை பெரும் எனவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றது. இதன் மூலம் தென் இந்திய மாநிலங்கள் மத்தியில் ஆளும் கட்சி எதுவாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கும் பலம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்த முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 23-ஆம் நாள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்துக்கது.