“பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்” இந்தியாவுக்கே சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை 1947-ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு சுஷ்மா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான “கில்ஜித் பல்திஸ்தான்” பகுதியை 1947ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்துள்ளதோடு, 5வது மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவது கண்டனத்திற்கு உரியது. “கில்ஜித் பல்திஸ்தான்” சட்டப்பூர்மாகவும், அரசியலமைப்புபடியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவுக்கே சொந்தம். இதற்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாட வேண்டாம்.
பிரிவினையின் போது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக “கில்ஜித் பல்திஸ்தான்” இருந்த போதும் பிரிட்டன் ஏஜென்ட்டாக பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவம் அப்பகுதியில் இருப்பதற்கு அனுமதியளித்தது. அதன் காரணமாக 1947 முதலே பாகிஸ்தான் அப்பகுதியை ஆக்ரமித்துள்ளது. இவ்வாறு சுஷ்மா தெரிவித்தார்.