ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் பாஜக-வும், எதிர்கட்சிகளும் இறங்கி உள்ளன.
மாநில கட்சிகளை இணைத்து, பாஜக-வுக்கு எதிரான கூட்டணி அமைத்து, அதன் சார்பில் பொது வேட்பாளை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
குடியரசு தலைவராக உள்ள பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் குடியரசு தலைவராக பதவியேற்ற இவர், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில், குடியரசு தலைவர் தேர்தல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, 'மீண்டும் ராஷ்டிரபதி பவனுக்கு திரும்பும் போட்டியில் பங்கேற்கும் எண்ணமில்லை. இன்னும் 2 மாதங்களில் எனது பணி நிறைவு பெற இருக்கிறது. ஜூலை 25-ம் தேதி புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க உள்ளார். என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை, அவர்கள் சார்ந்த அமைச்சகங்ளுக்கும் துறைகளுக்கும் திரும்ப அனுப்புகிறேன்' என தெரிவித்தார்.