இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜம்மு-காஷ்மீர் அணுகுமுறையில் தவறாக நடந்துக்கொண்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!
மேலும் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் எடுத்த முடிவுகள் சரிதான் எனவும், ஜவஹர்லால் நேரு செய்த தவறுகளை தற்போது பிரதமர் மோடி சரி செய்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முந்தைய மாநிலத்தில் 370 வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் "வரலாற்று தவறுகளை" மோடி சரி செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதன் அன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்., "ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து சர்தார் வல்லபாய் படேல் சரியான முடிவு செய்தார். நேரு ஜி தவறான அனுகுமுறையினை கையாண்டார். நேரு ஜி-ஆல் ஒரு வரலாற்று தவறு செய்யப்பட்டது. இன்று, அந்த வரலாற்று தவறை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தைரியம் காட்டியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஷ்த்து அளிக்கும் சட்ட பிரிவு 370-னை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 6, 2019 அன்று, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவு மற்றும் 35A பிரிவை அகற்றுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். மற்றொரு நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீரை இரண்டு லெப்டினன்ட் கவர்னர்களுடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைத்தது. ஒரு யூனியன் பிரதேசம் லடாக் என்றும் (சட்டசபை இல்லா யூனியன் பிரதேசம்), மற்றொன்று ஜம்மு-காஷ்மீர் (சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம்) என்றும் மத்திய அரசு அறிவித்தது.
பின்னர் புதன்கிழமை, பாஜக ராஷ்டிரிய ஏக்தா சமேலனையில் உரையாற்றிய பிரசாத், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவதற்கு சர்தார் படேல் ஒருபோதும் ஆதரவாக இல்லை என்று பிரசாத் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘370-வது பிரிவினால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கேள்வியைக் கேட்டார், ஆனால் யாரும் அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை’ என குறிப்பிட்ட அவர், ஜம்மு-காஷ்மீரில் அதன் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர் 106 சட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.