விவசாயிகள் பெற்ற வேளாண் கடனில் ஒரு பைசாவை தள்ளுபடி செய்வதில் மோடி அரசு அக்கரை காட்டவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
டிசம்பர் 7-ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் பாஜக-வும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இன்று நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது...
கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை முதல்வர் வசுந்தரா ராஜே அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது தேர்தலுக்கு சில மாதங்களே மீதம் இருக்கும் நிலையில் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்குமுன் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.70 ஆயிரம் கோடி, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், தற்போதுள்ள பாஜக ஆரசு ரூ.3.50 லட்சம் கோடி வாராக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக இதுவரை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் அது குறித்து திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது என ராகுல் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
2014-ஆம் ஆண்டு போது தேர்தலின் போது மோடி கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளாரா?... இல்லை, தொலைக்காட்சியில் தன்னை சுயவிளம்பரம் செய்துக்கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக உள்ளது. மணிக்கு ஒருமுறை தொலைக்காட்சிகளில் மோடி பிரவேசிப்பது போல் சாதாரன மனிதர் ஒருவரால் செய்ய முடியுமா?, இல்லையெனிலில் மோடி தன் சுயவிளம்பரத்திற்கு எத்தனை கோடிகளை செலவு செய்கின்றார் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்!