இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்!!
கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு அனுமதிக்கும் வரை இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறாது என IPL தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது; தற்போது நிலவும் சூழலில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நம்மைப் போன்ற மக்கள் முடிவெடுக்கக் கூடாது. இது மத்திய அரசால் முடிவெடுக்கப்பட வேண்டியது. அதனால் நமது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்காமல் இருப்பது நல்லது. எனவே இம்முடிவை எடுக்க அரசு மற்றும் அதுதொடர்பானவர்கள் மட்டுமே ஆவர்.
இதில், அவர்கள் நாட்டின் நலன் கருதி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும். எனவே அதன்படி நான் செயல்படுவோம் என்றார்.