தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாகப் போராடினர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், விலங்குகள் வதை தடுப்பு அவசர சட்டம் 2017 என்ற அவசர சட்டத்தை 21-ம் கொண்டு வந்தார்.
23-ம் தேதியன்று சட்டசபையில் நடந்த சிறப்பு கூடுகையில் இந்த அவசர சட்டத்துக்கான மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடையில்லாமல் நடத்தும் வகையில், மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. சட்டசபையில் அந்த மசோதா நிறைவேறி நிரந்தர சட்டமாகிய பிறகு அதை அரசியல் சாசனத்தின் 254 (2)ம் பிரிவின்படி ஜனாதிபதியின் பரிசீலனைக்காக கவர்னர் பதிவு செய்யவேண்டும். அதன்படி, ஜனாதிபதியின் கவனத்துக்கு அதை கவர்னர் அனுப்பி வைக்க வேண்டும். தற்போது அந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டார்.
ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற வேண்டியதிருப்பதால் அதை தமிழக அதிகாரிகள் நேற்று டெல்லிக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்ப பெறுவதால் வழக்கு முடித்து வைக்கப்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இடைக்கால மனு தொடர்பாக திங்கள் கிழமை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனுவை தாக்கல் செய்து உள்ளது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து யாரேனும் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற வகையில், தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் நடந்ததை அடுத்து மத்திய அரசுடன் ஆலோசித்து, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியது.
இப்போது தமிழக அரசின் தரப்பில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.