பொதுத் துறை வங்கிகள் வலிமையுடன் திகழ, சிறிய வங்கிகளை ஒன்றிணைப்பது அவசியம் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
புதுடெல்லியில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அருண் ஜெட்லி பொதுத்துறை வங்கிகள், ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் திகழ வேண்டும். அதற்கு சட்ட ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் (அ) சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து, பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பொதுத் துறையைச் சேர்ந்த சிறிய வங்கிகளை படிப்படியாக இணைத்து, பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செயல்பாட்டின் மூலம் சர்வதேச வங்கிகளின் போட்டியை சமாளிக்க கூடிய வகையில், இந்திய வங்கிகள் வலிமை பெறும் என தெரிவித்த அவர் மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்னர் தொலைபேசி மூலம் வேண்டப்பட்டவர்களுக்கு வங்கி கடன் வழங்க உத்தரவிடும் கலாசாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கடன் வசூலிப்பிலும், எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இன்றி நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், பல வங்கிகள் இடர்ப்பாட்டு கடன்களை வாராக் கடன் பிரிவில் சேர்க்காமல் இருந்தன; அவை, ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால், வாராக் கடன் பிரிவிற்கு மாற்றப்பட்டன. இந்த வெளிப்படையான நடைமுறை காரணமாக பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு அமல்படுத்திய திவால் சட்டம் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, வங்கிகள் காட்டிய தீவிரம் போன்றவற்றால், வாராக் கடன், 2 - 3 காலாண்டுகளாக குறைந்து வருகிறது. கடந்த, 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ஆம் ஆண்டு டிசம்பர் வரை பொதுத் துறை வங்கிகள், 2,87 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூளித்துள்ளன எனவும் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 98,493 கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலானதை விட 100% அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.