ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக 28,000 துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையால்ல என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!
ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள நேற்றிரவு முதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர் எனவும், நகரின் அனைத்து நுழைவாயில்களும் துணை ராணுவப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஜம்முவில் ஏற்கனவே கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 28,000 வீரர்கள் ஜம்மு -காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அப்பகுதி மக்களை பெரும் அதிர்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஜம்மு -காஷ்மீரில் 28,000 வீரர்கள் குவிகப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை எனவும், கடந்த ஜூலை 26-ஆம் தேதி 10000 கூடுதல் வீரர்களை குவித்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் அபாயம் காரணமாக, காஷ்மீர் மாநிலம் முழுவதும் வழக்கமாக 60,000 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்த படுகின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை காரணமாக சமீபத்தில் அங்கு மேலும் 20,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். இதனிடையே கடந்தமாதம் 26-ஆம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு மேலும் 10,000 வீரர்களைப் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசு அனுப்பியது.
திடீரென அளவுக்கு அதிகமான வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் நடைமுறையில் உள்ள சிறப்புச் சட்டப் பிரிவு 35A- வை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அங்கு எந்தக் கலவரமும் ஏற்படாமல் இருக்கவே அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
சிறப்புச் சட்டப் பிரிவு 35A - வின் படி, வெளி மாநிலத்தவர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அம்மாநில மக்களுக்கு அரசு வேலைகள் மற்றும் மானியங்களில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும். பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிப்படி இந்த சட்டப்பிரிவை நீக்குவதற்காகவே படைகள் குவிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தன.
எனினும், சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது அந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வாய்ப்பில்லை எனவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மிகப்பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதன் காரணமாகவும் அந்தப் பகுதியில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளத தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மேலும் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.