நாடெங்கிலும் உள்ள மதராஸா பள்ளிகளை மூட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷியா வஃபு வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீவிரவாத செயல்களை மதராஸா பள்ளிகள் ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள வாசீம் ரிஸ்வி, நாடெங்கிலும் உள்ள மதராஸா பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிஸ்வி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது...
நாட்டில் உள்ள அனைத்து மதராஸாக்களையும் மூட வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், தீவிரவாத செயல்களுக்கான சதித்திட்டங்களை தீட்டும்போது, முதலில் சிறுவர்களைத்தான் அதைச் செய்வதற்கான நபர்களாக உலகெங்கிலும் குறி வைக்கின்றனர். உலகெங்கிலும் IS பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் அது இந்தியாவிலும் பரவ வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணத்தைக் காட்டி சிறுவர்களை IS இயக்கத்தினர் ஈர்த்து வருகின்றனர். இஸ்லாமியக் கல்வி என்ற பெயரில் தீவிரவாத கொள்கைகளை அவர்கள் கற்பித்து வருகின்றனர். எனவே அனைத்து மதராஸா பள்ளிகளையும் உடனடியாக இழுத்து மூடவேண்டும், இல்லாவிட்டால் அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகத்தான் இருப்பார்கள். நல்ல கல்வியையும், மத நல்லிணக்கத்தையும் வழக்கமான பள்ளிகளில்தான் சிறுவர்கள் கற்க முடியும். அதே சமயம், அவர்களது தனிப்பட மத நம்பிக்கைகளையும் பின்பற்ற முடியும் என்று ரிஸ்வி குறிப்பிட்டுள்ளார்.
IS பாணியிலான தீவிரவாத போதனைகளை கற்பித்ததாக லூதியானாவில் மௌல்வி ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 17-ம் தேதி கைது செய்த நிலையில், ஷியா வஃபு வாரியத் தலைவரின் இந்த வேண்டுகோள் தலைவர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.