10% இடஒதுக்கீடு; அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலினை...

10% இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது!

Last Updated : Mar 11, 2019, 06:34 PM IST
10% இடஒதுக்கீடு; அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலினை... title=

10% இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது!

பொருளாதாரரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளித்து கொண்டுவரப்பட்ட  சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதி மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது. 

இந்த புதிய சட்டதிருத்தத்தின் படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீட்டில் குடியிருப்போர், நகராட்சி பகுதியில் 100 அடிக்கு அதிகமான இடத்திலும், நகராட்சி இல்லாத இடத்தில் 200 அடிக்கு அதிகமான இடத்திலும் குடியிருப்போர் இந்த சலுகையை பெற இயலாது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்புபடி 50% மேல் இடஒதுக்கீடு அளவு செல்லக்கூடாது. ஆனால், ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீடு அளவைக் குறைக்காமல், 103-வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆனால், பொருளாதார ரீதியில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவித்து ஆர்வலர் டெஹ்சீன் பூனாவாலா, சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரனையின் போது பூனாவாலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிடுகையில், "இடஒதுக்கீட்டை 50%-க்கு மேல் கொண்டு செல்வது அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகும். சட்டத்திருத்தம் கொண்டு வந்து அரசமைப்பை நீர்த்துப்போகச் செய்கிறார்கள்" என வாதிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில் "பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என அறிவித்தார். மேலும்  இதுதொடர்பாக இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் ஆலோசிக்கப்படும் எனவும், அதுவரை எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனவும் குறிப்பிட்டார்.

Trending News