காஷ்மீர்: கத்துவாவில் 40 கிலோ வெடிபொருட்கள் மீட்பு; பெரும் சதி முறியடிப்பு

கத்துவா (Kathua) மாவட்டத்தில் 40 கிலோ வெடிபொருட்களை மீட்ட இந்திய பாதுகாப்பு படையினர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 23, 2019, 01:47 PM IST
காஷ்மீர்: கத்துவாவில் 40 கிலோ வெடிபொருட்கள் மீட்பு; பெரும் சதி முறியடிப்பு title=

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துல்லியமான அதிரடி நடவடிக்கையால் பெரும் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புப் படையினர் (Security Force) தங்கள் தேடுதல் நடவடிக்கையின் போது கத்துவா (Kathua) மாவட்டத்தில் 40 கிலோ வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

கத்துவாவின் திலாவால் பகுதியின் உள்ள தேவால் கிராமத்தில் இந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். இந்த வெடிபொருள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பதைக் குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த 40 கிலோ வெடிபொருள் எப்படி இங்கு வந்தது? அதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370_வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர், பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரமாக ஊடுருவும் முயற்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். அவரிகளின் முயற்ச்சிகளை நமது ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் போர் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் வரும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பெரிய அறிக்கையை அளித்துள்ளன. உளவுத்துறை அறிக்கையின்படி, காஷ்மீரில் 237 பயங்கரவாதிகள் சதித்திட்டத்தில் ஈடுபட உள்ளனர். அவரிகளில் 166 உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும், 107 பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியுள்ள பயங்கரவாதிகளில் அதிகபட்சமாக லஷ்கர்-இ-தைபா அமைப்பு சேர்ந்த 112 பயங்கரவாதிகள், அதற்கு அடுத்தப்படி 100 தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள். மற்றொரு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷின் 59 பயங்கரவாதிகள் மற்றும் அல் பதர் குழுமத்தின் 3 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களில், 158 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரிலும், வடக்கு காஷ்மீரில் 96 பயங்கரவாதிகள் மற்றும் மத்திய காஷ்மீரில் 19 பயங்கரவாதிகள் என பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டு பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2,050 முறை மீறியுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Trending News