Kailash Gahlot Enforcement Directorate News In Tamil: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ( Delhi Liquor Policy Scam Case) டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 7 நாள்கள் நீதிமன்ற காவலில் இருந்த அவரை மீண்டும் மார்ச் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அதில் அவர் மீதான நீதிமன்ற காவலை நான்கு நாள்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற காவலில் இருந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து நீடித்து வருகிறார். மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது ஆளும் பாஜக மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், மார்ச் 31ஆம் தேதியான நாளை தேசிய தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு
அரவிந்த் கெஜ்ரிவாலின் (Arvind Kejriwal) கைது அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் அவரின் முதல்வர் பதவியில் நீடிப்பது தற்போது உறுதியாகி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்.
டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான மதுபான கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாக இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த மதுபான கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது.
டெல்லி அரசின் கொள்கையானது சில்லறை விற்பனையாளர்களுக்கு கிட்டத்தட்ட 185 சதவிகிதமும், மொத்த விற்பனையாளர்களுக்கு 12 சதவிகிதமும் எவ்விதத்திலும் சாத்தியமில்லாத அதிக லாப வரம்பை வழங்கியதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதில் 600 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக மீட்கப்பட்டது, மேலும் அந்த பணம் கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை தொடர்ந்து கூறி வருகிறது.
கைதான தலைவர்கள்
அரவிந்த் கெஜ்ரிவாலை மட்டுமின்றி ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளனர். சமீபத்தில் இதே வழக்கில் தெலங்கானா மேலளவை உறுப்பினரும், அம்மாநில முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளான கவிதா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இதில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
கைலாஷ் கெலாட் மீது விசாரணை
அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி 10 நாள்கள் நெருங்கி உள்ள நிலையில், தற்போது மற்றொரு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி அமைச்சருமான கைலாஷ் கெலாட்டும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
டெல்லியின் உள்துறை, போக்குவரத்து மற்றும் சட்டத்துறை அமைச்சராக கைலாஷ் கெலாட் உள்ளார். அமலாக்கத்துறை அவரிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை மேற்கொண்டது. அந்த டெல்லி மதுபான கொள்கையை உருவாக்கிய வழிமுறைகள் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன. விசாரணைக்கு பின் கைலாஷ் கெலாட் வெளியிட்ட அறிக்கையில்,"என்னிடம் சுமார் 5 மணி 30 நிமிடங்கள் வரை விசாரணை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராவேன்" என கூறினார்.
மேலும் படிக்க | 4 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ