வாழத் தகுதியற்ற நரகத்தை விட மோசமாக மாறும் டெல்லி; உச்சநீதிமன்றம் வேதனை

டெல்லி இனி வாழத் தகுதியற்றது, நரகத்தை விட மோசமாகிவிட்டது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. மக்களை இந்த வழியில் இறக்க விடலாமா? என உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2019, 06:54 PM IST
வாழத் தகுதியற்ற நரகத்தை விட மோசமாக மாறும் டெல்லி; உச்சநீதிமன்றம் வேதனை title=

புதுடெல்லி: டெல்லி-என்.சி.ஆர் (Delhi - NCR) பகுதிகளில் மாசுபாடு அதிகரித்து வரும் பிரச்சினையை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் இன்று ஒரு வலுவான கருத்தை வெளியிட்டு உள்ளது. 'டெல்லி இனி வாழத் தகுதியற்றது, நரகத்தை விட மோசமாகிவிட்டது' என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் டெல்லி மக்கள் தினம் தினம் மூச்சுத் திணறலால் இறப்பதை விட 15 பைகளில் வெடிபொருட்களைக் கொண்டு வந்து ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து அனைவரையும் கொன்று விடுவது நல்லது என்று மத்திய அரசை கடுமையாக சாடியது. நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், இந்தியாவில் வாழ்க்கை என்பது மிகவும் மலிவானது அல்ல. நீங்கள் அதற்கான தண்டனையை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று கூறினார்.

டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் தலைமைச் செயலாளரிடம் நீதிமன்றம் நாற்காலியில் அமர உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியது. டெல்லி மக்கள் வாழ எவ்வளவு பணம் அளிக்க வேண்டும்? ஒவ்வொரு நபருக்கும் எத்தனை லட்சம் கொடுக்க வேண்டும்? ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வளவு மதிப்பீடு செய்துள்ளீர்கள்? என சரமாரியாக மாநில அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பியது. 

தில்லி அரசாங்கத்துக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றாக அமர்ந்து, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் காற்று சுத்திகரிப்பு கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தவிர, நகரத்தின் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டெல்லியில் உள்ள தொழிற்சாலைக்கு அறிக்கை அளிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் (CBCP) உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. டெல்லியில் உள்ள தொழிற்சாலை குறித்து விரிவான தகவல்களை வழங்குமாறு உச்சநீதிமன்றம் சிபிசிபியிடம் கேட்டுக் கொண்டது.

இந்தியாவில் வாழ்க்கை இப்போது மிகவும் மலிவானது அல்ல. போபால் எரிவாயு சோகத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதைவிட காற்று மாசு சுவாசிப்பது குறைந்தது இல்லை. மக்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யாவிட்டால் நாற்காலியில் இருக்க தலைமைச் செயலாளர்களுக்கு உரிமை இல்லை. மக்களின் வாழ்நாளைக் குறைக்க முடியுமா? டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) மிகப்பெரிய குற்றவாளி.

பஞ்சாபின் தலைமைச் செயலாளரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். உச்சநீதிமன்றம் பஞ்சாபின் தலைமைச் செயலாளரைக் கண்டித்ததுடன், மக்களை இந்த வழியில் இறக்க விடலாமா? என்று கேள்வி கேட்டனர் நீதிபதிகள். நீதிமன்றம் உத்தரவு இருந்தபோதிலும், கோதுமை பயிர்களை எரிக்கும் சம்பவம் எவ்வாறு அதிகரித்தது என்று உச்ச நீதிமன்றம் பஞ்சாபின் தலைமைச் செயலாளரிடம் கேட்டது. நீதிமன்றம் பஞ்சாப் தலைமைச் செயலாளரிடம், இதைத் தடுப்பதில் நீங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? இது நிர்வாகத்தின் தோல்வி அல்லவா?

உச்சநீதிமன்றம் பஞ்சாப் தலைமைச் செயலாளரிடம் கேட்டது, எதிர்காலத்திற்கான உங்கள் திட்டம் என்ன, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள். மாசு காரணமாக நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஏன் இழப்பீடு வழங்க முடியாது? என்று கேட்டு பஞ்சாபின் தலைமைச் செயலாளரை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அதற்கு பதில் அளித்த பஞ்சாப் தலைமைச் செயலாளர், மாசுபாட்டை நாங்கள் கண்காணித்து வருகிறோம், செயற்கைக்கோளின் படம் தினமும் எடுக்கப்படுகிறது என்று கூறினார். 

முன்னதாக ஹரியானா மாசுபாடு கட்டுப்படுத்துவதை நன்றாக செய்து வந்தது. ஆனால் அதன் பின்னர் மோசமான நிலைமை மீண்டும் உருவாகி உள்ளது. உச்சநீதிமன்றமும் ஹரியானாவின் தலைமைச் செயலாளரைக் கண்டித்ததுடன், எங்கள் உத்தரவுக்குப் பிறகு, ஹரியானாவில் பயிர்களை எரிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. பஞ்சாபை விட அதிக பயிர்களை எரித்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது என நீதிமன்றம் கூறியது.

இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கூறியது. மாநிலங்கள் தங்களுக்குள் பேசவில்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. டெல்லி வழங்கும் நீரில் தொடங்கி அனைத்திலும் அரசியல் நடக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் மட்டுமே அரசியல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. டெல்லி மக்களின் நலனுடன் விளையாடுவதை விட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Trending News