ரஃபேல் விவகாரம்: காங்கிரஸ் குற்றசாற்றுக்கு பதிலடி தந்த மந்திரி நிர்மலா சீதாராமன்

ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சியின் குற்றசாற்றுக்கு பதிலடி தந்த நாட்டின் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2019, 04:22 PM IST
ரஃபேல் விவகாரம்: காங்கிரஸ் குற்றசாற்றுக்கு பதிலடி தந்த மந்திரி நிர்மலா சீதாராமன் title=

ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகின்றது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் திருப்தியளிப்பதால் இது தொடர்பான விசாரணைக்கு அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் ரஃபேல் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. 

ரபேல் ஒப்பந்தத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஏன் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர் எனவும், ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதம் மோடி தனது கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் ராகுல் கூறினார்.

இந்தநிலையில், இன்று ரபேல் குறித்து பேசிய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. அதனால் தான் ரபேல் குறித்து தொடர்ந்து பொய்களை கூறிவருகிறது. 

கடந்த 8 ஆண்டுகளாக வெறும் ஒப்பந்தம் செய்ய மட்டுமே நேரத்தை வீணடித்தது காங்கிரஸ். 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ரபேல் ஒப்பந்தத்தை ஏன் முடிக்கவில்லை? எப்போதும் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுவதே காங்கிஸின் வேலை எனவும் அவர் குற்றம்சாட்டினார். எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சி ரபேல் ஒப்பந்தின் மதிப்பு 526 கோடி ரூபாய் என்று கூறுகிறது. ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? 

ரபேல் ஒப்பந்ததின் மதிப்பு குறித்து வெளியே சொல்லமுடியாது. ஏனென்றால் அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமானது. 2019 செப்டம்பரில் நாட்டில் முதல் ரபேல் விமானம் தரையிறங்கும். 2022 ஆம் ஆண்டுக்குள் 36 விமானங்களும் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்த ஒப்பந்தம் வெறும் 14 மாதங்களில் நிறைவுற்றது. பழைய ஒப்பந்தத்தை விட எங்கள் அரசாங்கம் 9 சதவிகிதம் குறைவாக ஒப்பந்தம் செய்துள்ளது.

சீனா மற்றும் பாக்கிஸ்தான் பெரிய போர்க்கப்பல்களை தயார் செய்வதில் ஈடுபட்டுள்ளது எனவும் லோக் சபாவில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

எனவே நாட்டின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது நமது கடமை. அதன் தேவையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் இந்தியா பாதுகாப்பில் தன்னிறைவு அடையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News