புதுடெல்லி: தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் அரசின் திட்டம் ஆகும். வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை, நாட்டில் நீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள இடங்கள் மற்றும் வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் திட்டமாகும்.
இந்திய அரசின் தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது.
1972 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது.நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே, நடிகர் ரஜினிகாந்த் ’பகீரத யோஜ்னா’ என்று நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு பெயரிட்டு அதை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவித்தார். அதை பாராட்டிய வாஜ்பாயி, ரஜினியை பாராட்டி, நதிநீர் இணைப்புத் திட்டம் தனது கனவுத் திட்டம் என்று சொன்னதும் உலகம் அறிந்த்தே.
ரஜினிகாந்த் அத்துடன் நின்றுவிடாமல் 2002ஆம் ஆண்டிலேயே நதிநீர் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்கத் தயார் என்றும் அறிவித்தார்.சரி, நதிநீர் இணைப்பு அதன் சாதக-பாதகங்கள், சாத்தியக்கூறுகள் என பல விஷயங்கள் இருந்தாலும், ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
அதற்கு அண்மை உதாரணமாக பிரம்மபுத்திரா நதியின் கீழ் இந்தியா 14.85 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கட்ட திட்டமிட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்றுக்கரையில் உள்ள நுமலிகர் மற்றும் வடக்குக் கரையில் கோஹ்பூரை இணைக்கும் இந்த சுரங்கப்பாதையின் உதவியால் பொது மக்கள் மட்டுமல்ல, ராணுவமும் நதியை எளிதாகக் கடந்துவிடலாம்.
சமீபத்தில் இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டதற்கும், இந்த சுரங்கப்பாதைக்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, சீனாவின் உள்கட்டமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில், எல்லையில் தனது உள்கட்டமைப்புகளை மேம்படுத்திவருகிறது. அசாம் ஊடகங்கள் இதுகுறித்து பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
பிரம்மபுத்திரா ஆற்றினை தற்போது இந்திய ராணுவம் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகக் கருதுகிறது. பிரம்மபுத்திரா வழியாக அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்குச் சீன ராணுவம் சுலபமாக நுழையும் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 1962 போரின் போது, பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாகவே சீனா ஊடுருவியது.
சீனாவின் திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி, உலகின் பெரிய 10 ஆறுகளில் ஒன்றாகும். இது, இந்தியா, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வழியாக பாய்ந்து வங்காள விரிகூடாவில் கலக்கிறது. விநாடிக்கு 19,830 கியூபிக் மீட்டர் தண்ணீர் பிரம்மபுத்திராவில் பாய்கிறது.
பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.