குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத அதிமுக அரசை கோடரிக்காம்பு என்று தான் சரித்திரம் பதிவு செய்யும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டம்!!
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, கடந்த திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை கூடியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதுபோல், வாக்கு வங்கி அரசியலுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவரவில்லை என அமித் ஷா கூறினார். இந்தியாவில் உள்ள ஒரு முஸ்லீம் கூட, மசோதா குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று உறுதிபடக் தெரிவித்த அமித் ஷா, இதுபற்றி யார் பயமுறுத்தினாலும், முஸ்லீம்கள் பயப்படத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மாலையிலும் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மசோதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இறுதியில் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அச்சப்பட தேவையில்லை என்றார். அதனைத் தொடர்ந்து, மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியை தழுவியது. திரிணாமுல் காங்கிரஸ் கொண்டு வந்த 14 திருத்தங்கள் தொடர்பான தீர்மானமும் வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், அதிமுக கட்சியின் பெயரில் உள்ள அண்ணாவின் பெயரை நீக்கிவிடலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அதிமுக ஆதரவு வழங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
#CitizenshipAmmendmentBill2019-க்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? pic.twitter.com/juYvbkranR
— M.K.Stalin (@mkstalin) December 11, 2019
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... "#CitizenshipAmmendmentBill2019-க்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.