UK Govt, Live-In Relationship New Rules in Unioform Civil Code: இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறு விவாதங்கள் கடந்த காலங்களில் நடந்து வந்துள்ளன. இடதுசாரிகள், வலதுசாரிகள், தாராளவாதிகள் என பல தரப்பிலும் பொது சிவில் சட்டம் குறித்த மதிப்பாய்வு வெவ்வேறாக இருந்து வருகிறது. வலதுசாரிகள் குறிப்பாக பாஜக பொது சிவில் சட்டம் குறித்து சமீப காலங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தது.
குறிப்பாக, 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்டில் அமல்படுத்துவோம் என பாஜக அறிவித்திருந்தது.
நாட்டிலேயே முதன்முறையாக...
அந்த வகையில், கடந்தாண்டு பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தரும் போது, புஷ்கர் சிங் தாமி இந்திய அரசியலமைப்பின் பிரதியை கையோடு கொண்டு வந்திருந்தார்.
ஒருவேளை, இந்த மசோதா சட்டமாக்கப்படும்பட்சத்தில், இந்திய சுதந்திரத்திற்கு பின் பொது சிவில் சட்டத்தை அமலாக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெரும் எனலாம். உத்தராண்டை போல் பாஜக ஆளும் குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொது சிவில் சட்ட மசோதாவில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அம்சம் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதாவது, திருமணமாகால் ஒன்றாக வாழும் இணையரும் (Live-In Relationship) இனி இதுசார்ந்து, பதிவு செய்ய வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய அம்சம் நாட்டில் வேறு இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லிவ்-இன் உறவு: என்னென்ன விதிமுறைகள்?
இந்த மசோதாவில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, 21 வயதுக்குட்பட்டோர் லிவ்-இன் உறவில் இருக்கும்பட்சத்தில், அதற்கு அவர்கள் இருவரின் பெற்றோர் தரப்பில் இருந்து சம்மதம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையையும் அவர் பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் உத்தரகாண்டைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையும் அவர் குறிப்பிட்டாக வேண்டும்.
தற்போது இந்த பொது சிவில் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள லிவ்-இன் உறவுக்கான விதிமுறைகள் குறித்து இதில் காணலாம். அதாவது, லிவ்-இன் உறவை மேற்கொள்ளும் ஜோடி ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கள் உறவு குறித்து பதிவாளரிடம் முறையாக பதிவு செய்து அறிக்கை சமர்பிக்கவில்லை என்றா ல் அவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இல்லையெனில், இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 28 வார கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
மேலும், பதிவாளரிடம் சமர்பிக்கும் அறிக்கையில் தவறான தகவல்களையோ, அல்லது தகவல்களை மறைத்தாலோ அவர்களுக்கு மூன்று மாத சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் இல்லையெனில் இரண்டும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் என்ன பலன்?
லிவ்-இன் உறவு குறித்து அந்த ஜோடி சமர்பிக்கும் அறிக்கை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை சரிபார்ப்பார்கள். மேலும், இந்த லிவ்-இன் உறவை பதிவு செய்திருந்தால், அந்த பெண் அந்த உறவினால் பாதிக்கப்பட்டால் அவர் நீதிமன்றத்தை அணுகி தனக்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இதில் பதிவு செய்வோர் முறையற்ற ரத்த உறவில் இருந்தால் அவர்களுக்கு அனுமதி கிடையாது. அதாவது, சட்ட ரீதியாக அவர் உடல் ரீதியில் உறவில் இருப்பதை அனுமதிக்க இயலாது என்பது இதன் முக்கிய அம்சம். அதுமட்டுமின்றி, திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பவர்களும் இதனை பதிவு செய்ய முடியாது. அவர்கள் மேல் தண்டனைகள் பாயும் வாய்ப்புள்ளது. லிவ்-இன் உறவில் ஜோடிக்கு குழந்தை பிறக்கும்பட்சத்தில், அந்த குழந்தைக்கு இருவரும் சட்டப்பூர்வ பெற்றோராக அங்கீகரிக்கப்படுவார்கள். அதுவும் பொது சிவில் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வரைமுறைகளுக்கு உட்பட்டு...
லிவ்-இன் உறவை கைவிட வேண்டுமா...
அதேபோல், லிவ்-இன் உறவில் இருந்து வெளியேற நினைக்கும்போது, தம்பதியர்கள் இருவருமோ அல்லது யாரோ ஒருவரோ உறவில் இருந்து வெளியேறுவது குறித்து பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். ஆணோ/பெண்ணோ யார் அந்த உறவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் தங்கள் துணைக்கு அந்த அறிக்கையை அனுப்ப வேண்டும். இவை அனைத்தும் பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொது சிவில் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டால் மட்டுமே அமலாகும்.
மேலும் படிக்க | பெண்களின் இதயத்தில் பட்டுனு இடம்பிடிக்கனுமா... ஆண்களுக்கு இந்த 5 குணங்கள் அவசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ