ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்படவில்லை என அட்டரனி ஜெனரல் கே.கே வேணுகோபால் தெரிவித்துள்ளார்!
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்கள் அசல் ஆவணங்களின் போட்டோ காப்பிகளையே பயன்படுத்தினர், இது அரசால் ரகசிய ஆவணங்கள் என்று தரம் பிரிக்கப்பட்டவை என்றுதான் கூறியிருப்பதாகத் திடீரென மாற்றுக் கருத்தைத் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து PTI செய்தி நிறுவனத்திற்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவிக்கையில்... “பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாக நான் கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது, அது சரியானது அல்ல. கோப்புகள் திருடப்பட்டன என்ற வாசகம் தவறானது” என தெரிவித்துள்ளார்.
அதாவது, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான நீதிமன்றத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என செய்திருந்த மனுவில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக 3 ஆவணங்களை இணைத்திருந்தனர் இது அசல் ஆவணத்தின் நகல்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் ‘திருடப்பட்டது’ என கூறினார் என்பது மிக கடுமையான வார்த்தை, இதனை தவிர்க்கலாம் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அரசு ரகசிய விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டு வந்தவர்கள் மீது Official Secrets சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அட்டர்னி ஜெனரல் தெரிவித்திருந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.