வெறும் 59 நிமிடத்தில் வங்கிக் கடன் பெறுவதற்கான தனி இணைய தளத்தை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!
சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு இன்று மத்திய நிதி அமைச்சகம் தனி இணைய தளம் ஒன்றை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த இணைய தளத்தை www.psbloansin59minutes.com தொடங்கிவைத்தார்.
இதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற இத்தகைய நிறுவனங்கள் விண்ணப்பித்த 59 நிமிடங்களில் முதற்கட்டமாக கடனுக்கான அங்கீகாரம் / தகுதிக்கு அனுமதி கிடைக்கும். பின்னர் அதிகபட்சம் 7-8 தினங்களுக்குள் இந்த கடன் வழங்க 59நிமிட இணைய தளம் வழி செய்கிறது.
மேலும், சிறு தொழிலுக்கான வங்கியான SIDBI உட்பட மற்றும் 5 பொது துறை வங்கிகள்(SBI, Bank of Baroda, PNB, Vijaya and Indian Bank) மூலமாக இத்தகைய கடன்களை வழங்க மத்திய நிதித் துறையின் நேரடிக் கண்காணிப்பில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் உற்பத்தி மந்தமாவதை தடுக்கவும் இத்தகைய கடன்களுக்கு முன்பு குறைந்த பட்சம் 25 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிறுவனங்கள் தங்களது வருமான வரிச் சான்றிதழ், ஜி.எஸ்.டி, கம்பெனி சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் எளிமையாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.