புதுடில்லி: பூட்டான், மாலத்தீவுக்குப் பிறகு, பங்களாதேஷ் இப்போது ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை நீக்கியதற்கு இந்திய அரசின் முடிவை ஆதரித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை இலங்கை முன்பே வரவேற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அமைக்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைக் குறித்து பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பங்களாதேஷ் கருதுகிறது. பங்களாதேஷ் எப்போதுமே பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும், எல்லா நாடுகளின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கும் நாடாகவே உள்ளது.
முன்னதாக, மாலத்தீவு இந்தியாவின் நடவடிக்கை ஒரு உள்நாட்டு விவகாரம் என்று குறிப்பிட்டது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், "எந்தவொரு இறையாண்மைக்கும் அதன் சட்டத்தை தேவைக்கேற்ப திருத்துவதற்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்தனர்.
அதேபோல இந்தியாவின் நிலைப்பாட்டையும் பூட்டான் ஆதரித்துள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு பூட்டானுக்கு விஜயம் செய்தார். பூட்டானின் நிலைப்பாடு குறித்து தகவல்களை அளித்த வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, "பூட்டான் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதுடன், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் எனக் கூறியுள்ளது" என்று கூறினார்.
இந்தியாவின் மற்ற இரண்டு அண்டை நாடுகளான நேபாளமும் ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை இருதரப்பு பிரச்சினையாக அறிவித்துள்ளன. இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க தனது ஒரு ட்வீட்டில் 'லடாக் மாநிலத்தை' உருவாக்கும் முடிவை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.