ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மை அல்ல என சுஷ்மா உறுதி படுத்தியுள்ளார்!
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ஆளுநராக நரசிம்மன் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ஆந்திராவில், ஆளுநர் நரசிம்மனுக்கு பதிலாக, புதிய ஆளுநராக சுஷ்மா சுவராஜை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மத்திய அமைச்சராகவும், டெல்லி முதல்வராகவும் சுஷ்மா இருந்தவர், எனவே இவரது பெயர் ஆளுநர் பதவிக்கு அடிப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் சுஷ்மா சுவராஜ் போட்டியிடவில்லை. மேலும் மோடியின் முந்தைய ஆட்சியில் வெளியிறுவு துறை அமைச்சராக இருந்த சுஷ்மா உடல்நிலை காரணமாக தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வேண்டாம் என அறிவித்தார். இந்நிலையில் தற்போது சுஷ்மா சுவராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இத்தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திராவின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜ்க்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இத்தகவல் உண்மை இல்லை என சுஷ்மா சுவராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மகாராஸ்டிர மாநில ஆளுநராக சுமித்ரா மகாஜன் நியமிக்கப்படவுள்ளார் என ட்விட்டரில் வெளியான செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சுமித்ரா மகாஜன் பதில் பதிவு அளித்தார். அந்த வகையில் தற்போது சுஷ்மா சுவராஜ் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்ததக்கது.