மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இன்று அரசு விடுமுறை....
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், லண்டன் மற்றும் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று சமீபத்தில் இந்தியா திரும்பினார். இதையடுத்து, மீண்டும் அவரது உடல்நலம் குன்றிய நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டிருந்தார். அங்கு கடந்த 2 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் மதிப்புமிக்க தலைவர் மற்றும் நண்பரை இழந்துவிட்டதால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் அனந்த குமார் மனைவியிடம் தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மேலும், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இன்று நாடெங்கிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1959-ம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்த அவர், பெங்களூரு தெற்கு தொகுதியிலிருந்து 6 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.