இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை காரணமாக பாகிஸ்தான் பெண் மற்றும் இந்திய மாப்பிள்ளைக்கு இடையே நடைபெற இருந்த திருமணம் நின்றுபோனது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய எல்லையான ராஜஸ்தான் மாநிலம் மார்மர் மாவட்டத்தில் உள்ள கஜத்கா பார் கிராமத்தில் உள்ள மகேந்திர சிங் என்ற இளைஞருக்கும், பாகிஸ்தான் சிந்து மகாணத்தில் உள்ள சினோய் கிராம பெண்ணுக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இவர்களின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடக்கயிருந்தது. இதற்காக மகேந்திர சிங்கின் குடும்பத்தார் 5 பேருக்கு, பாகிஸ்தான் அரசு 90 நாட்கள் விசா வழங்கியிருந்தது. இதனால் தார் எக்ஸ்பிரஸ் மூலம் பாகிஸ்தான் செல்ல மகேந்திர சிங் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து தற்போது தார் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதால், கல்யாணம் தடைப்பட்டுள்ளது.