பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாரான நிலையில் இருக்கும்படி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ராணுவ வீரர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய 2 நாள் பயணமாக சென்றுள்ள அவர் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேவேளையில் சட்டம்ஒழுங்கு நிலவரத்தையும் அவர் ஆய்வு செய்தார். காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துமாறும், பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடிப்பிடித்து வேட்டையாடும் படியும் அஜித் தோவல் உத்தரவு பிறப்பித்தார்.
தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாமல் சராசரி மக்கள் இயல்பான வாழ்க்கையை அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யுமாறும் அவர் பாதுகாப்பு படைகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிலையில்., கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக கருதப்படுகிறது, தீவிரவாதிகள் குறித்து முழு எச்சரிக்கையுடன் செயலாற்றும்படி அஜித் தோவல் இந்திய படைகளை கேட்டுக் கொண்டுள்ளார்.