குழந்தைகள் இறப்பை வைத்து அரசியல் செய்கிறதா பாஜக...?

ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் நூறு குழந்தைகள் இறந்துள்ளனர், இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக ஆபத்தான மரணங்கள் நிகழ்ந்தனவா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Last Updated : Jan 2, 2020, 03:46 PM IST
குழந்தைகள் இறப்பை வைத்து அரசியல் செய்கிறதா பாஜக...? title=

ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் நூறு குழந்தைகள் இறந்துள்ளனர், இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக ஆபத்தான மரணங்கள் நிகழ்ந்தனவா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 251 கி.மீ தூரத்தில் உள்ள கோட்டா நகரில் அரசு நடத்தும் JK Lone மருத்துவமனையில் டிசம்பர் கடைசி இரண்டு நாட்களில் குறைந்தது ஒன்பது குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகளின் மரணம் பாஜக மற்றும் மாயாவதியிடமிருந்தும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட், குழந்தைகளின் இறப்பு குறித்து தனது அரசாங்கம் உணர்திறன் கொண்டுள்ளது என்றும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று முதல்வர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் குறித்து அவர் குறிப்பிடுகையில்., "இந்த விஷயத்தை ஆராயுமாறு கேட்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட்டுக்கு கடிதம் எழுதியுள்ளேன். எங்கள் தரப்பிலிருந்து அனைத்து வகையான ஆதரவையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த முறை இறப்புகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக உள்ளது, '' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று இந்த சம்பவம் குறித்து கெஹ்லாட் அரசாங்கத்திடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளார். முன்னதாக செவ்வாயன்று, கெஹ்லாட் ராஜஸ்தான் அரசு இந்த விவகாரத்தில் உணர்திறன் கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக விளையாடக்கூடாது என்றும் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கிடையில், கோட்டா மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பது தொடர்பாக பாஜக அரசியல் செய்துவருவதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா குற்றம் சாட்டியுள்ளார், மேலும் மத்திய அரசு மருத்துவ வசதிகளுக்கு போதுமான நிதி வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மா, மாநிலத்தில் காங்கிரஸ் அரசு குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்., " கோட்டாவில் குழந்தைகள் மரணம் தொடர்பான பாஜக-வின் அரசியல் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களை மறைக்க அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. 2015, 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, மருத்துவமனை அதிகாரம் நிதி கோரியது, அப்போது ஏன் பணம் வெளியிடப்படவில்லை? " என்று சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., "ஒரு குழந்தை இறந்தாலும், அது எங்களுக்கு கவலை அளிக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் பாஜக அரசியல் செய்து வருகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ​​குழந்தை இறப்பு விகிதம் (IMR) 7.62 சதவீதமாக இருந்தது. தற்போது 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. தாய்வழி இறப்பு விகிதத்தையும் நாங்கள் குறைத்துள்ளோம்,” என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கோட்டாவில் உள்ள தாய் மற்றும் குழந்தை நல மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் பத்து குழந்தைகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மருத்துவமனையில் அதிகாரி ஒருவர் கூறுகையில், டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இந்த வளாகத்தில் இறந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில், கோட்டாவை தளமாகக் கொண்ட அரசு மருத்துவமனையில் 940-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பு பதிவாகியுள்ளது.

91 கைக்குழந்தைகளின் இறப்பை அறிந்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தலைமை மருத்துவ அதிகாரி BS தன்வருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜனவரி 3-ஆம் தேதி வரை ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது. இது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் துலாராவையும் கண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News